ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

இரவுத் தொழுகை பதினொன்று ரக்காத்துகள் தானா?



‘எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)
            சத்திய இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் அது ஒருபோதும் அல்லாஹ்வால் வணக்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்கின்ற அடிப்படையை மனதில் நிருத்தியவர்களாக இரவுத் தொழுகை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.

தராவீஹ் என்றால் என்ன?
         
            ‘தர்வீஹதுன்’ என்றால் ஓய்வு என்று பொருள்படும். ‘தர்வீஹதுன்’ என்பதன் பன்மையே தராவீஹ் ஆகும். தராவீஹ் தொழுகை என்றால் ‘ஓய்வுத் தொழுகைகள்’ எனப் பொருள்படும். ஆனால், தராவீஹ் என்ற சொற்பிரயோகம் அல்குர்ஆனிலோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளோ பயன்படுத்தப்படவில்லை. எனவே, இதிலிருந்து தராவீஹ் என்ற பெயர் பிற்பட்ட காலத்தவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இரவுத் தொழுகை தொடர்பாக அல்குர்ஆன் மற்றும்  ஆதாரபூர்வமான நபிமொழிகளில்

1. கியாமுல் லைல் (இரவில் நிற்றல்)
2. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
3. வித்ர் (ஒற்றைப் படை)
4. தஹஜ்ஜத் (விழித்தெழுந்து தொழும் தொழுகை)
என ஒரே தொழுகைக்கு பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதனால் இந்த தொழுகைகளை வெவ்வேறு தொழுகைகள் என சில மார்க்க அறிஞர்கள் தவறாக விளங்கியுள்ளனர்.

ரமழானுக்கு என்று சிறப்பு  தொழுகைகள் உண்டா?


            நபிமொழிகளை ஆய்வு செய்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரழமான் அல்லாத காலங்களில் தொழுது வந்த 11 ரக்காத்துகளையே ரமழானிலும் தொழுதுள்ளார்கள். மாறாக, ரமழானுக்கு என்று எந்த சிறப்பு தொழுகைகளையும் கற்றுத் தரவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால், ஏனைய மாதங்களை விட ரமழானில் தொழுவதற்கு அதிகமதிகம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
          ‘எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37)

தஹஜ்ஜத்தும் தராவீஹும்


          சில மார்க்க அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகை வேறு, தராவீஹ் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். ஆனால், அவர்களின் வாதம் தவறானது என பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றன.
            ‘ரமழான் மாதத்தின் இருபத்து மூன்றாவது இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் பாதிவரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவிற்குத் தொழுதோம்’ (அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷிர் (ரழி), நூல்: நஸயீ-1606, அஹ்மத்-18402)

             அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 11 ரக்காத்துகளை, இரவில் வெவ்வேறு நேரங்களில் தொழுதுள்ளார்கள் என்பதை மேலுள்ள நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

இரவுத் தொழுகையும், வித்ரும்


               சில மார்க்க அறிஞர்கள் வித்ர் தொழுகை வேறு, இரவுத் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். இந்த வாதமும் தவறானதாகும்.
           ‘உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.’  (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998)
              மேலேயுள்ள நபிமொழியில் வித்ர் என்கின்ற வார்த்தையை மொழி பெயர்க்காமல் விட்டுவிடுவதனாலேயே ‘வித்ர்’ என்பது தனியானதொரு தொழுகை போன்று தோற்றமளிக்கின்றது.
               ‘வித்ர்’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றைப் படை’ என்று பெருளாகும். எனவே, குறித்த நபிமொழியை ‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப் படையாக்கி கொள்ளுங்கள்’ என முழுமையாக மொழிபெயர்க்கும் போது இரண்டும் தனித்தனி தொழுகை என்கின்ற வாதம் தவறானது என்பது தெளிவாகின்றது.

இரவுத் தொழுகையின் ரக்காத்துகள் எத்தனை? 


             ‘நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு  ரக்காத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்காத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்காத்துகள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)
          மேலேயுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்கு உட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது.
          அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.
                          ஆனால், அன்னையவர்கள் ‘ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று  மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள். மேலுள்ள நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்காத்துகளை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்காத்துகள் தொழுது வந்தார்களோ அதே பதினொன்று ரக்காத்துகளையே ரமழானிலும் தொழுது வந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள். ’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)

     தராவீஹ் தொழுகை இருபது  ரக்காத்துகள் என்று வாதிடக்கூடியவர்கள் எடுத்து வைக்கின்ற தவறான வாதங்களும் தக்க பதில்களும்


தவறான வாதம்:

            ‘உமர் (ரழி) அவர்களது காலத்தில் நாங்கள் இருபது ரக்காத்துக்கள் தொழுது வந்தோம்.’ (அறிவிப்பவர்:ஸாயிப் பின் யஸீத், நூல்: பைஹகீ-833)

தக்க பதில்: 


1. குறித்த செய்தியில் நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் சம்பந்தப்படவில்லை. மாறாக, உமர் (ரழி) அவர்கள் காலத்தில் நடந்ததாகவே குறித்த செய்தி குறிப்பிடுகின்றது.
2. குறித்த செய்தியில் ‘அம்ரு பின் அப்துல்லாஹ்’ எனும் இயற்பெயருடைய ‘அபூஉஸ்மான் அல்பஸரி’ எனும் ‘யாரென்று அறியப்படாதவர்’ இடம்பெறுவதால் இச்செய்தி ஆதாரபூர்மற்றதாகும். மேலும் ‘ஸாயிப்  பின் யஸீத்’ அவர்களே நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் 11 ரக்காத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள்  என்று அறிவிக்கக் கூடிய செய்தி ஆதாரபூர்வமாக இடம்பெற்றுள்ளது. ‘மக்களுக்கு பதினொரு ரக்காத்துகள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி  ஆகிய இருவருக்கும் உமர் (ரழி) அவர்கள் கட்ளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸாயிப்  பின் யஸீத், நூல்: முஅத்தா-379)

தவறான வாதம்: 
     
          ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்காத்துகள் தொழுது வந்தனர்’ (அறிவிப்பவர்: யஸீத் பின் ரூமான், நூல்: பைஹகீ-4802, முஅத்தா-380)

தக்க பதில்:

             குறித்த செய்தியை அறிவிக்க கூடிய ‘யஸீத் பின் ரூமான்’ என்பவர் உமர் (ரழி) அவர்களது காலத்தில் பிறந்தவர் கிடையாது. எனவே, இச்செய்தி ஆதாரபூர்வமற்றது.

தவறான வாதம்:
 
    
           அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் ரமழான் காலத்தில் ஜமாஅத்தாக இல்லாது இருபது ரக்காத்துகளும் வித்ரும் தொழுதார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூற்கள்: பைஹகீ- அஸ்ஸுனனுல் குப்ரா-4799, தப்ரானி-அல்முஃஜமுல் கபீர்-10ஃ86, தப்ரானி-அல்முஃஜமுல் அவ்ஸத்-2ஃ309, 12ஃ176, முஸன்னப் இப்னு அபீஷைபா-2ஃ164, முஸ்னத் அப்து பின் ஹமீத்-1ஃ218)

தக்க பதில்: 

            குறித்த செய்தி ஆதாரபூர்வமற்றது. மேற்குறித்த செய்தியை பதிவு செய்துள்ள இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே, இச்செய்தியில் இடம்பெறும் அபூஷைபா எனப்படும் இப்றாஹிம் பின் உஸ்மான் என்பவர் இச்செய்தியை தனித்து அறிவிக்கின்றார். இவர் பலவீனமாவர் என்று குறிப்பிடுகின்றார்கள்.
மேலும், குறித்த செய்தியில் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அடுத்து இடம்பெறக்கூடிய  அறிவிப்பாளர் மிக்ஸம் என்பவராவார். மிக்ஸம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் ஹகம் என்பராவார். ஹகம் அவர்களுக்கு அடுத்து இடம்பெறும் அறிவிப்பாளர் அபூஷைபா எனப்படும் உஸ்மானின் மகன் இப்றாஹீம் என்பவராவார். இவரைப்பற்றி அறிஞர்கள் செய்த விமர்சனத்தைப் பற்றி, ஷாபி மத்ஹபின் மிகப்பிரபல்யமான இமாமான அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
          ‘இமாம் அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூதாவுத் போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர் கிடையாது எனவும் இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவரைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது என்று இமாம் புஹாரி கூறியுள்ளார். இவர் நிராகரிக்கப்படும் செய்திகளை அறிவிப்பவர் என்று திர்மிதி கூறுகிறார்.
இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டுள்ளதால் இவரை விட்டுவிட வேண்டுமென நஸாயி, தவ்லாபி போன்றோர் கூறுகின்றனர். இவர் பலவீனமானவர். யாரும் இவர் குறித்து பேசுவதில்லை. இவரது செய்திகளை விட்டுவிட்டனர் என அபூஹாத்தம் கூறியுள்ளார். இவர் மதிக்கத்தக்கவரல்ல என ஜவ்ஸஜானி கூறியுள்ளார். இவரது செய்திகளை பதிவு செய்யக் கூடாதெனவும், இவர் ஹகம் என்பவர் வழியாக நிராகரிக்கத்தக்க பல்வேறு செய்திகளை அறிவித்துள்ளார் எனவும் ஸாலிஹ் ஜஸ்ரா கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என அபூஅலீ நைஸாபூரி கூறியுள்ளார். இவர் ஷுஹ்பா அவர்களின் பலவீனமான ஆசிரியர்களில் ஒருவர் என அல்அஹ்வஸ் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்: பாகம்-01, பக்கம்-125) எனவே, இது ஆதாரபூர்மற்ற செய்தியாகும்.

               மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில் 23 ரக்காத்துகள் தொழவிக்கப்படுகின்றதே?
 
                  நாம் மார்க்க விசயத்தில் முன்மாதிரியாக கொள்ள வேண்டியது அருள்மறைக் குர்ஆனையும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான பொன்மொழிகளையும் மாத்திரமே. மாறாக, அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கட்டளையிட்டது கிடையாது. இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
                ‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து  (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’(அல்குர்ஆன் 07:03) இதில் ஆச்சரியம் என்னவென்றால், மக்காவில் கப்ரு வணக்கம், மௌலூத், ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் பாராயண நிகழ்வு, கத்தம், பாத்திஹா, தகடு, தாயத்து, தரீக்கா போன்ற வழிகேடுகள் கிடையாது.
மேலும், தப்லீக் ஜமாஅத் பகிரங்கமாக செயற்பட அனுமதி கூட கிடையாது.  இவற்றிலெல்லாம் மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளாத இவர்கள் இரவுத் தொழுகை விடயத்தில் மாத்திரம் மக்காவை முன்னுதாரணமாகக் காட்டுவது இவர்களின் இரட்டை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது.

இரவுத் தொழுகையும் புதுவழியும்


           தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்காத்துகளும், வித்ர் என்ற பெயரில் 3 ரக்காத்துகளும், கியாமுல்லைல் என்ற பெயரில் 11 ரக்காத்துகளுமாக, 11 ரக்காத்துகளை மாத்திரம் கொண்ட ஒரே தொழுகையை 34 ரக்காத்துகளாக தொழுது வருகின்றனர். இவ்வாறு தொழுவதன் மூலம் இரவுத் தொழுகையை அதிகப்படுத்திய குற்றத்திற்குள்ளாவதுடன்,
           ‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப் படையாக்கி கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998) என்கின்ற நபிமொழியையும் மீறுகின்றனர். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவுத் தொழுகை பதினொன்று ரக்காத்துகள் எனத் தீர்மானித்ததன் பின்னர் இரவுத் தொழுகையின் ரக்காத்துகளை அதிகப்படுத்துவது தொடர்பாக பின்வரும் நபிமொழிகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.
             ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
           ‘செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடை முறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
           மேலேயுள்ள நபிமொழிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்துவது நம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத்தொழுகையின் ரக்அத்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதன் பின்னர் நன்மை என்ற பெயரில் அதிகப்படுத்துவது மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.
          ‘உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
எனவே, அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த முறையில் இரவுத் தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு வல்லோன் அல்லாஹ் அருள் புரிவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக